தமிழ்ச் சைவ இலக்கியம்
சான்றிதழ்ப் படிப்பு (6 மாதங்கள்)
2021-2022ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்ச் சைவ இலக்கியம் – சான்றிதழ்ப் படிப்பு தொடங்கப்பட்டது. வாரம்தோறும் சனிக்கிழமை மட்டும் இப்படிப்பிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிவனை முழுமுதற் கடவுளாகப் போற்றுவது சைவ சமயம். சைவசமயக் கொள்கைகளையும் பக்தி உணர்வுகளையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். அவர்கள் சிவத் தலங்கள் தோறும் சென்று பாடல்களைப் பாடி சைவப் பதிகங்களை அருளினர். தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து சைவ சமயத்தினைப் பரப்பவும் சிவபெருமானின் புகழைப் பாடவும் பல்வேறு பக்தி இலக்கியங்கள் தோன்றின.
தமிழ் இலக்கியப் பனுவல்கள் மனித வாழ்வை நெறிப்படுத்துவதிலும் மனச்சோர்வு அகற்றுவதிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இவற்றில் சில சைவ இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும் சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்துவன. இவ்விலக்கியங்களே சைவத் திருமுறைகள் மற்றும் சைவ சாத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழிலக்கியம் பயிலும் மாணவர்கள், பிற பாடங்களைப் பயிலும் மாணவர்கள் மற்றும் வயது வரம்பின்றி அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் தமிழ்ச் சைவ இலக்கியம் சான்றிதழ்ப் படிப்பிற்கான (6 மாதங்கள்) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.